நடிகர் ப்ரித்விராஜ், ப்ளெஸ்ஸி இயக்கத்தில் நடித்து வரும் படம் ஆடுஜீவிதம். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டிலுள்ள பாலைவனத்தில் நடைபெற்று வந்தபோது கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. அதனால் 58 பேருடன் ஆடுஜீவிதம் படக்குழு ஜோர்டான் நாட்டின் பாலைவனத்திலேயே சிக்கிக்கொண்டது.
மத்திய அரசின் வந்தே பாரத் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், ஜோர்டன் நாட்டிலிருந்த 187 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இதில் 'ஆடுஜீவிதம்' குழுவினரும் அடக்கம்.
இதுகுறித்துப் பேசிய இயக்குனர் ப்ளெஸ்ஸி, "மருத்துவத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் கோவிட்-19 பரிசோதனை மையத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம். மீண்டும் கேரளா திரும்பியது நிம்மதியாக இருக்கிறது. ஜோர்டனில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை இன்னும் முடிக்கவில்லை. சகஜ நிலை திரும்பியவுடன் அதை முடிப்போம் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
சிறிது காலத்திற்குப் படக்குழுவினர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்து, கட்டண தனிமைப்படுத்துதல் நிலையத்தைப் படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. நடிகர் ப்ரித்விராஜும் இவர்களுடன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மாத போராட்டத்திற்குப் பின் இந்தப் படக்குழு கேரளா திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.