மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த நாவல் ‘ஆடு ஜீவிதம்’. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி நிறைந்த வாழ்க்கை மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து கேரளா திரும்பினார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.
இந்த நாவலை தழுவி ‘ஆடு ஜீவிதம்’ என்ற அதே தலைப்பில் மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலரை வைத்து படம் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அதை தொடர்ந்து படம் வெளியான பிறகு மாதவன், யோகி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது. இதுவரை மலையாளத்தில் பிரேமலு -ரூ.135 கோடி, லூசிஃபர் - ரூ.127 கோடி, புலிமுருகன் - ரூ.152 கோடி, 2018 - ரூ.175 கோடி, மஞ்சும்மல் பாய்ஸ் - ரூ.222 கோடி ஆகிய படங்கள் அதிகம் வசூலித்த படங்களாக டாப் 5 இடத்தில் இருக்கிறது. இதில் ஆடுஜீவிதம் போலவே பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஆடுஜீவிதம் படத்தை தவிர்த்து அனைத்து படங்களும் மலையாளத்தில் மட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.