கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகர் பிரித்திவி ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில்...
"கேரளாவில் உள்ள யானைக்கு யாரோ ஒருவர் பட்டாசுகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை வேண்டுமென்றே உணவளிக்கவில்லை.
பயிர்களைப் பாதுகாக்க காட்டுப்பன்றிகளைத் தடுக்க வைக்கப்பட்டிருந்த வெடிக்கும் வலையை அது தற்செயலாகச் சாப்பிட்டு விட்டது.
இது சட்டவிரோதமானதுதான் என்றாலும், சாகுபடி செய்யப்பட்ட பகுதிக்குள் படையெடுத்து பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளைத் தடுக்க இந்த முறை பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்தது மலப்புரம் அல்ல பாலக்காடு மாவட்டத்தில்.
இந்தச் சம்பவத்திற்கு எந்தவிதமான வகுப்புவாத தொடர்பும் இல்லை.
வனத்துறை மற்றும் காவல்துறையினர் இருவரும் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்துறை, இந்த சம்பவம் தெரிந்தவுடன் யானையை மீட்க முயன்றது, ஆனால் முயற்சி வீணாகிவிட்டது.
யானை இறந்தது நேற்று அல்ல, மே 27 அன்று'' எனக் கூறியுள்ளார்.