கடந்த 2018 ஆம் இந்தியில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘அந்தாதூண்' படத்தின் தமிழில் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். தமிழில் அந்தகன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் பிரசாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரசாந்த், அவரது தந்தை தியாகராஜன், உள்ளிட்ட அந்தகன் படக்குழுவினருடன் இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய பிரசாந்த், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி, 2 வருஷமாச்சு இப்படி பிறந்தநாள் கொண்டாடி. அந்தகன் படம் ரொம்ப நல்ல வந்திருக்கு. படம் பார்த்தவர்கள் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்குன்னு சொல்றாங்க ஆர்.கே செல்வமணி சார் எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பாரு. அவருக்கு கோவமே வராது, அப்படி வந்த செட்ல எல்லாரும் அடங்கி போயிடுவோம். தமிழ் சினிமால எல்லாரும் பிரம்மாண்டம், பிரம்மாண்டம்னு சொல்லிட்டு இருக்கோம். அந்த பிரம்மாண்டம் 90 களில் எங்களுக்கு ஒரு பெரிய சகாப்தம். ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி வெளியிட்ட முதல் இயக்குநர் ஆர்.கே செல்வமணி சார்தான்.
இன்னைக்கு நிறைய பேர் பிரம்மாண்டம்னு சொல்லலாம், கொண்டாடலாம். ஆனால் அதை முதலில் கொண்டாடுவது ஆர்.கே செல்வமணி சார்தான். அவர் தான் சினிமாவின் பரிணாமத்தை மாற்றியவர். சினிமாவை இப்படியும் எடுக்க முடியும், இவ்வளவு பெருசா பண்ண முடியும்னு சாதித்து காட்டினார். நிறைய விஷயம் எனக்கு தெரியும்னு சொன்னாங்க. ஆனால் அதற்கு காரணம் என தந்தையும், ஆர்.கே செல்வமணி சார் மட்டும்தான். அவங்ககிட்ட இருந்துதான் நான் எல்லாம் கத்துக்கிட்டேன்" எனத் தெரிவித்தார்.