சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த எதிர்ப்புக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்து தெரிவிக்க வேண்டிய காலகட்டத்தை ஒரு மாதம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்த அறிக்கை வெளியானபோதே நடிகர் சூர்யா ட்விட்டரில் அனைவரும் இதுகுறித்து பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய தேசியக் கல்வி கொள்கைக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து பலரும் சமூக வலைதளத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.
சூர்யாவின் பேச்சிற்கு அதிமுகவினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில், “புதியகல்வி கொள்கை பற்றி சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.