ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் ரூ.50 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர்.
பிரதீப் ரங்கநாதன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட சில பிரபலங்களைத் தவறாக விமர்சித்துப் பதிவிட்டது போல் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பார்த்த பலரும் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். ஒரு சிலர் ஆதரவாகவும் கருத்து கூறி வந்தனர். ஆனால், பிரதீப் ரங்கநாதனின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தான் இதுபோல் பதிவிட்டாரா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் இந்த விமர்சனம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது விளக்கமளித்துள்ளார். அந்தப் பதிவில், "என் பெயரில் வைரலாகி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.
மேலும், சில பதிவுகள் உண்மையானவை தான். ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன். வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதைச் சரி செய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.