
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு சக்சஸ் மீட் ஹைதரபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
அப்போது பிரதீப் ரங்கநாதனிடம், நீங்கள் தனுஷை பின்பற்றுவது போல இருக்கிறதே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நானும் அதை கேட்டு வருகிறேன். யாரையும் நான் பின்பற்ற முயற்சிக்கவில்லை. ஒருவேளை என் உடல் மற்றும் முக அமைப்பு அப்படி இருக்கலாம்” என்றார். பின்பு அவரிடம் தனுஷை போல் உங்களுக்கு இருக்கும் ஒற்றுமைகள் நல்ல விஷயமாக பார்க்கிறீர்களா அல்லது கெட்டதாக பார்க்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் “நான் கண்ணாடியில் பார்க்கும்போது, என்னைத் தான் பார்க்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியிருக்கின்றன. நானும் நன்றாகத்தான் நடித்து வருகிறேன்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட அஷ்வத் மாரிமுத்து, “உங்கள் கண்களுக்கு நீங்கள் சொல்லும் நடிகரைப் போல அவர் தோன்றலாம். ஆனால் எனக்கு, அவர் பிரதீப் ரங்கநாதன் போலத்தான் தோன்றுகிறார். ஒப்பீடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தக் கேள்வி என்று நினைக்கிறேன். ஆனால், பிரதீப் ரங்கநாதனில் வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.