Skip to main content

பிரபு தேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

prabhu deva brother issue

 

சென்னையை பூர்வீகமாக கொண்ட விக்னேஷ், 2021ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீடு இல்லாமல், வீடு தேடி வந்துள்ளார். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குநர் மற்றும் நடிகரான நாகேந்திர பிரசாத்தின் வீடு காலியாக இருப்பதை பார்த்துள்ளார். இது தொடர்பாக வீட்டை லீசுக்காக கேட்க அவரை தொடர்பு கொண்டபோது நாகேந்திர பிரசாத்தின் மனைவி ஹேமா பேசியுள்ளார். அவர், எங்கள் வீட்டை எஸ்டிஎஸ்கே பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திடம் கேர் டேக்கர் ஆக கொடுத்துள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாய் கொடுக்குமாறும், அவர்கள் நாகேந்திர பிரசாத்திற்கு மாதம் ரூபாய் 36,000 வீதம் இரண்டு வருடத்திற்கு கொடுத்து விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து விக்னேஷ், நாகேந்திர பிரசாத் மனைவி கூறியது போல் எஸ்டிஎஸ்கே நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து லீசுக்கான தொகை 25 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, கேர்டேக்கராக செயல்பட்டு வந்த நிறுவனம் நாகேந்திர பிரசாத்திற்கு ஒரு வருடம் மட்டும் வாடகை தொகையை கொடுத்து விட்டு அதன் பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். 

 

இதனை தொடர்ந்து விக்னேஷ் குடும்பத்துடன் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு, நாகேந்திர பிரசாத்தின் ஆட்கள் வந்து வீட்டின் வெளிப்புறம் பூட்டியுள்ளனர். மேலும் பூட்டை திறக்காதவாறு வெல்டிங் வைத்து சென்றுள்ளனர். பின்பு வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டி வெல்டிங் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினருடன் வீடு இல்லாமல் தவிக்கும் நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. 

 

இந்த நிலையில் விக்னேஷ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்னேஷ், எஸ்டிஎஸ்கே நிறுவனம் நாகேந்திர பிரசாத்தை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர். அதற்காக கடந்த ஒரு வருடமாக வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் நாகேந்திர பிரசாத் என்னை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று தனது வீட்டை பூட்டி வெல்டிங் செய்துவிட்டு சென்றுள்ளனர். குறிப்பாக தனது நாயை உள்ளே வைத்து பூட்டியுள்ளதால் உணவில்லாமல் அது தவித்து வருகிறது. எனவே உடனடியாக போலீஸார் தலையீட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் நாகேந்திர பிரசாத், விக்னேஷிக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை எனவும், தனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் விக்னேஷ் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்