Skip to main content

ராகவா லாரன்ஸ் படக் குழுவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

police complaint against rudhran movie

 

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் 'ருத்ரன்'. இப்படத்தில் 'ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்' சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் வருகிற 14 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் நடனக் கலைஞர்களுக்குச் சம்பளம் தராமல் மோசடி செய்திருப்பதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரைக் கொடுத்த நடன அமைப்பாளர் ராஜ் என்பவர் அந்தப் புகாரில், "படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காகத் துணை நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த காட்சி படமாக்கப்பட்ட பின் அதில் பணியாற்றிய அனைவருக்கும் பல நாட்கள் ஆகியும் சம்பளம் தரவில்லை. இது குறித்து பெப்சி உறுப்பினர் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டபோது 2 நாட்களில் வந்துவிடும் என்றார். 

 

ஆனால் 2 நாள் கழித்தும் வரவில்லை. இதனை அடுத்து திரைப்படத்தின் மேலாளரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் பத்து பைசா கூட உங்களுக்கு தர முடியாது எனப் பேசினார். இது தொடர்பாக பலமுறை பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்பு மறுபடியும் மேனேஜரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காமல் ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

 

10 நாட்கள் கடுமையாக உழைத்து நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் வாங்கி தராமல் மேனேஜர் மற்றும் ஏஜென்ட் ஸ்ரீதர் ஆகியோர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுடைய சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் நடனக் கலைஞராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்