தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகப் பல்வேறு படங்களில் நடித்தவர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் படத்தில் நாயகியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் நடிகரோடு துணையாக வலம் வருவார். சின்னத்திரையில் வெளியாகும் சீரியல் ஒன்றில் குணசேகரன் என்ற கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டியெங்கும் இவர் சென்றடைந்தார். அதுவும் குறிப்பாக “இந்தாம்மா... ஏய்...” என இவர் சீரியலில் பேசும் வசனம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறது.
இன்று காலை டப்பிங் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகத் தேனி எடுத்துச் செல்ல உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நடிகர் மாரிமுத்துவிற்கு தன்னுடைய எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒரு கணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன்; என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன்; தேனியில் நான்தான் திருமணம் செய்து வைத்தேன். இன்று அவன் மீது இறுதிப் பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்” என்றிருக்கிறார்.