இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப் பலரும் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ‘ஜெய் பீம்’ படத்திற்கு எந்த ஒரு விருதும் கொடுக்கக் கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருக்கு பாமக செய்தி தொடர்பாளர் கே. பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில், " ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி மக்களை சித்திரவதைப்படுத்தும் போலீஸ் அதிகாரி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஒரு காட்சியில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்கினி குண்டம் இடம்பெற்றிருக்கும். இதனை வேண்டும் என்றே படக்குழு திட்டமிட்டு வைத்துள்ளது. இது வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தியுள்ளது. ஆகையால் ‘ஜெய் பீம்’ படத்திற்கு மத்திய அரசு சார்பில் எந்த ஒரு பாராட்டும், விருதும் அளிக்கக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.