ரஜினி காந்த் நடிப்பில் 2.0 படம் உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இந்த படம் பலரிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினி காந்த் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது. இந்த படம் மார்ச் மாதத்தில் துவங்கி அடுத்த 2020 ஜனவரியில் முடியும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி காந்த் ‘பேட்ட’ என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று அஜித் நடிப்பில் வெளியாகும் விஸ்வாசம் படத்துடன் போட்டியிடுகிறது. பேட்ட படத்தில் ரஜினி காந்தை தவிர விஜய் சேதுபதி, சசி குமார், சிம்ரன், திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ஆம் தேதி வைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 3ஆம் தேதி பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சிங்கிள் டிராக்கிற்கு “மரண மாஸ்” என்று குறிப்பிட்டுள்ளது.