![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/og0Xuw-iT8wUCOyMB6yFhax-1lYm-sZOL_ltpneIEbo/1594020782/sites/default/files/inline-images/vijay-1_0.jpg)
சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சென்னையிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து, விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பாஸ்கர் காலனியில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விருகம்பாக்கம் போலீஸார் விரைந்தனர். வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், தொலைபேசி மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதன்பின் சைபர் க்ரைம் உதவியுடன் மிரட்டல் விட்ட நபர் யார் எனக் கண்டறிய போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 22 ஆகும்.
சென்னை போலீஸாரின் தகவலின்படி, விழுப்புரம் போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் இருந்ததால், இனி இதுபோல நடந்துகொள்ளாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் அலு வலகத்திற்கு மிரட்டல் விடுத்ததாக அவர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.