ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்து இருக்கும் படம் 'ரேசர்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ். அகில் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு பரத் என்பவர் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், "சங்கங்களை குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள். உங்களால் உள்ளே நுழைந்து போராட முடிந்தால் போராடுங்கள். சினிமா துறையில் கத்துக்கிட்டு சினிமாவுக்கு வாருங்கள். படம் வெளியிடுவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்" என தொடர்ந்து சங்கங்கள் குறித்தும் படக்குழுவை பற்றியும் பேசினார். மேலும், "ஸ்டண்ட் யூனியன் என்று ஒன்று இருக்கு. அவர்களது பெயர்களை போட்டிருக்கலாம். இங்கே நிறைய பேர்கள் இருக்கிறது. நான் கேள்விப்படாத சங்கம் பெயர் எல்லாம் இருக்கிறது. சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நடக்கிற தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. நடக்காத தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது" எனப் பேசினார்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த சிறு பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்த ஒருவர் குறுக்கிட்டு பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு மைக் அருகில் வந்து, "அவனும் தெளிவாக இல்லை. எதுக்கு சார் சங்கம் ஆரம்பிக்கணும். எல்லாருமே திருடன் தான் சார்." என கோபமாக பேசினார். பின்பு இருவருக்கும் மேடையிலே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு பேசிய சங்கத்தை சேர்ந்தவர், "சிறு பட தயாரிப்பாளர் சங்கம் என்று ஒன்று இருப்பதையே தெரியவில்லைனு சொல்லறாரு. இவர் மிகப் பெரிய ஜாம்பவான். சினிமாவில் நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர். உலகத்துல உள்ள அத்தனை ஹீரோ மற்றும் ஹீரோயின்களை கிழி கிழின்னு கிழிப்பாரு. அவருக்கு இந்த ஏழு சங்கம் தெரியவில்லைனு சொன்னா... நான் என்னத்த சொல்றது" என பேசிவிட்டு அமர்ந்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு உண்டானது. அதன் பிறகு பயில்வான் ரங்கநாதன் பேசிவிட்டு அமர்ந்தார்.