Skip to main content

“டைம் ஆச்சுனா கிளம்புங்க” - கடுப்பான பேரரசு

Published on 22/03/2025 | Edited on 22/03/2025
perarasu angry on emi movie event

சபரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்துள்ள படம் ‘ஈ.எம்.ஐ.’(EMI)- மாதத் தவணை”. இப்படம் காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் பாக்கியராஜ், தேவையானி போன்றவர்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ள பேரரசு பேசுகையில், “என் உதவி இயக்குநர் இயக்கியுள்ள படம் இது. சினிமாவில் முதன் முதலில் என்னை கதை எழுத வைத்தவர் பாக்யராஜ் சார் தான். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என போட வைத்தது அவர் தான். இயக்குநர் என்றால் அவர் தான் கதை எழுத வேண்டும், என விதியை உருவாக்கியவர் அவர் தான். அவர் ஒரு ஜாம்பவான். அவர் வாழ்த்த வந்திருப்பதற்கு நன்றி. ஈ.எம்.ஐ. எல்லோரும் வாங்கியிருப்பார்கள், முதல் மூணு மாதம் கட்டுவார்கள் ஆனால் 4 வது மாதம் கட்ட மாட்டார்கள், வாங்கியவர் ஆஃபிஸ் போய்விடுவார்கள், வசூலிக்க வருபவர்களிடம்  பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆம்பளைகள் வாங்கும் ஈ.எம்.ஐ-யால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஈ.எம்.ஐ. எல்லோரும் பொறுப்போடு பார்க்க வேண்டிய அருமையான படம், ஈ.எம்.ஐ. வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது, அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது. இன்று டாஸ்மாக் ஒரு போதை, ஈ.எம்.ஐ. இன்னொரு போதை, இது ரெண்டும் அழிய வேண்டும்” என்றார். இடையில் அவர் பேசும் போது கீழிருந்து சலசலப்பு எழுந்தது. உடனே கோபப்பட்ட பேரரசு, “டைம் ஆச்சுனா நீங்க கிளப்புங்க. நான் அடிக்கடி பார்க்குறேன் நான் பேசும் போது மட்டும் இந்த மாதிரி பண்றீங்க. உங்கள வற்புறுத்தல முடிஞ்சா பாருங்க, இல்லைனா கிளம்புங்க” என்றார்.  

சார்ந்த செய்திகள்