கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் பாடலாசிரியர் பழனிபாரதி தான் எழுதிய பாடலை எஸ்.பி.பி பாடிய நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில்...
"விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தில் ஒரு பாடல். நோயில் வீழ்ந்த மகனை ஆறுதலாக... நம்பிக்கையாக எழ வைக்கும் தந்தையின் குரல். எஸ்.பி.பி பாடினார். இசைஞானியின் இசையில் எனது வரிகள்...
"நீதான் என் கனவு - மகனே
வா வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழுநிலவு
மெதுவாய்...
திடமாய்...
எழுவாய்... "
பாடி முடித்த எஸ்.பி.பி, அந்தப் பாடலில் இசையின் நுட்பங்களைப் புகழ்ந்தார்..."எப்படி இது என்றால், எனக்குத் தெரியாது கம்போஸ் பண்ணும்போதே வர்றதுதான் என்பார். God bless him... அவர் நீண்ட காலம் வாழணும்" என்று இசைஞானியை வாழ்த்தினார். (அந்நேரம் இசைஞானி அங்கில்லை; அவரது அறையில் இருந்தார்)
அதே அலைவரிசையில் அந்த ஆருயிர் நட்பின் இன்னொரு குரல்தான்...
"பாலு... சீக்கிரமா எழுந்து வா. உனக்காக காத்திருக்கிறேன்"
என்ற இசைஞானியின் நம்பிக்கையான பிரார்த்தனைக் குரல்...
மெதுவாய்
திடமாய்
எழுவாய்..." என கூறியுள்ளார்.