நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், மோகன்.ஜி, கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி, யுகபாரதி உள்ளிட்ட பலரும் கண்டங்கள் தெரிவித்த நிலையில் நடிகை பார்வதி நாயர், "நாங்குநேரியில் சாதி வேற்றுமையால் பள்ளி மாணவனும், அவனது சகோதரியும் தாக்கப்பட்ட சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. அனைவருக்கும் சமத்துவம், கருணை மற்றும் மரியாதையை ஊக்குவிக்கும் சூழலில் மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும். பள்ளிகள் வளர்ச்சியின் இடமாக இருக்க வேண்டுமே தவிர பயமுள்ள இடமாக அல்ல. மனிதநேயம் அனைத்து பிரிவுகளையும் தாண்டியது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமுத்திரக்கனி, "சாதி வெறி…. மண்ணோடு மண்ணாகட்டும்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Deeply disturbed by the incident in #Nanguneri where a school student and his sister were attacked due to caste differences.
Students must be nurtured in an environment that promotes equality, kindness, and respect for all. Schools should be places of growth, not fear.
Parents… pic.twitter.com/KyAKbRNJot— Parvati (@paro_nair) August 12, 2023