மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு இமேஜை உருவாக்கியுள்ளார் நடிகை பார்வது திருவோத்து. தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களை தாண்டி தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்வார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை உருவாகுவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பை சார்ந்தவர்கள் தன்னை பாத்ரூம் பார்வதி என கிண்டல் செய்ததாக கூறியுள்ளார்.
சமீபத்தில் வயநாடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், “சீனியர் நடிகைகளுக்கு சில பிரச்சனைகள் இருப்பதால், படப்பிடிப்பு தளங்களில் பாத்ரூம் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தேன். அதனால் அம்மா அமைப்பை சேர்ந்த சில நிர்வாகிகள் என்னை பாத்ரூம் பார்வதி என கூப்பிட ஆரம்பித்தனர். நான் எதாவது சில பிரச்சனைகளை பேசினால், எல்லாருமே ஒரே குடும்பம் தானே என்று சொல்லி என்னை சமாதானப்படுத்துவர்” என்று சற்று வேதனையுடன் பகிர்ந்தார்.