மெய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் கலந்து கொண்டார். பின்ப்ய் மேடையில் பேசிய பார்த்திபன், “என்னுடைய படங்கள் சிலருக்கு முன்மாதிரியாக இருப்பது என்பது எனக்கு பெருமை. அதைத் தான் நானும் எதிர்பார்க்கிறேன். வெறுமனே சினிமாவுக்கு வந்தோம், சம்பாதித்தோம் போனோம் என இருக்க விரும்பவில்லை. கடைசி வரைக்கும் சினிமாவை காதல் செய்வது கஷ்டமான விசயம். சினிமா பல நேரங்களில் என்னைக் கைவிட்டாலும், நான் விடமாட்டேன். தொடர்ந்து காதலிப்பேன்.
தற்போதெல்லாம் படத்தை வெளியிடுவது என்பதே கஷ்டமான விசயம். ஆனால் நான் இந்தியன் 2 உடன் வெளியிட்டேன். கமல் தான் என்னுடைய மிகப்பெரிய ஆதர்ஷன். சினிமா என்றால் 3 எழுத்து. கமல் என்றால் 3 எழுத்து. தமிழ் சினிமாவில் முதன்முதலில் பிரமாண்டத்தைக் கொண்டு வந்ததே இயக்குநர் சங்கர் தான். மேலும், லைகா போன்ற நிறுவனங்களால் தான் இதுபோன்ற பெரிய படங்களை தயாரிக்க முடியும். அப்படிப்பட்டவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், சினிமா என்று வரும் போது, அதாவது போட்டி என சொன்னால் அவர்கள் கிரிக்கெட் ஆடினால், நான் கில்லி தாண்டு விளையாடுவேன். இதில் எந்தவித ஒப்பீடும் கிடையாது. ஆனால், செய்தியாளர்கள் எழுதும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக எழுத வேண்டும். இது எனது வேண்டுகோள்.
ஏனென்றால், நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் சொல்லும் பதிலில் பாதியை மட்டும் எடுத்துப் போடுவதால் பாதிப்பு எனக்குத்தான். உதாரணமாக, இந்தியன் 2 படம் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு, டீன்ஸ் படம் வெற்றிப்படமாக வந்திருந்தால், அந்த சந்தோசத்தைக் கொண்டாடும் விதமாக அன்று மாலையே இந்தியன் 2 படத்தை பார்த்திருப்பேன். என் படத்திற்கான ரிசல்ட் சரியாக இல்லை என்பதால், நான் தியேட்டர் தியேட்டராக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அதனால், என்னால் இந்தியன் 2 பார்க்க முடியவில்லை என்றேன். ஆனால், செய்திகளில் இந்தியன் 2 ரிசல்ட் சரியாக இல்லாததால் நான் பார்க்கவில்லை என எழுதியுள்ளனர். இதனால் ட்விட்டரில் முகமே தெரியாத நபர்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள்” என்றார்.