தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றது. இதையடுத்து '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மறைந்த பிரபல நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முதல் சூப்பர் ஸ்டார் ஆஃப் தமிழ்நாடு. புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். கடைசி ரீல் மிக மோசமான சோகம். பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தியாகராஜ பாகவதர் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அப்படங்களின் மூலம் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும் பெற்றார். மேலும் இன்று வரை எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.