சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டு, உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
'
'இந்த 21 நாட்களில் ஒரு நல்ல விஷயத்தை முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். ஒரு கெட்ட விஷயத்தை விட்டுவிட்டால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும். உதாரணத்துக்கு, குடிப்பழக்கத்தை 21 நாட்கள் கைவிட்டுவிட்டால், அதன்பின் இந்த பழக்கம் இல்லாமல் போய்விடும். போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் தியானம் செய்யலாம். நம் உள்மனம் நோக்கிய ஒரு பயணம் தான் தியானம். மிஷின் போல் நமக்காக உழைக்கும் நமது உடலுக்காக தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளை இந்த 21 நாட்கள் முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களை பரப்புவதும் மிக முக்கியம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மக்களாகிய நம் ஒத்துழைப்போடு, விரைவில் இந்தியா இந்த நோயில் இருந்து மட்டுமல்லாமல், எந்த போர் வந்தாலும் அதில் வென்று மிளிர்வது, ஒளிர்வது நிச்சயம்'' என கூறியுள்ளார்.