இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிற்கு பார்த்திபன் சென்றுள்ளார். அதில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு, “நான் அனைத்தையும் பாசிட்டிவாக பார்ப்பேன். நண்பர் விஜய் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று அவசியமே இல்லை. பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார். கலெக்சன் மன்னன், ரூ.200 கோடி சம்பளம், இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். அப்படியென்றால், அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் சப்போர்ட் பண்ணிவிடலாம்.
மாறுதல் ஒன்றே மாறாதது. கடைசி வரைக்கும் இவர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும், இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜய்யும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்.
பிரபலமான ஒருவர் ஒரு பிரச்சனையை பற்றி பேசும் போது அது பெரிய அளவில் கவனம் பெறுகிறது. அதனால் மக்களுக்கு பெரும் ஆதரவு பெருகும். அப்படி பெருகும் பட்சத்தில் அரசு, தான் நினைத்ததை செய்ய முடியாத சூழலில் அது பிரபலமானவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும். அது இயல்பாக நடக்கும் ஒன்றுதான். அப்படித்தான் பரந்தூருக்கு விஜய் செல்லும் போது ஏற்பட்டது. இதே போல் எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரும் போது அவருக்கு ஏகப்பட்ட இடர்பாடுகள் இருந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும் போஸ்டர் கூட அடிக்க முடியாத சூழலும் அவருக்கு ஏற்பட்டது. விஜயகாந்த் அரசியலுக்கு வரும் போதும் அவருக்கும் இது மாதிரியான விஷயங்கள் இருந்தது. விஜய்யும் தலைவா படத்துக்கு ஜெயலலிதா ஆட்சியில் பிரச்சனையைச் சந்தித்தார்.
எப்போதுமே உயரத்தில் இருப்பவர்கள் அவர்களை தற்காத்து கொள்வதற்காக செய்யும் ஒரு விஷயம்தான் அது. இது கட்சிகளை தாண்டி அனைவரும் செய்யும் ஒரு விஷயம்தான். இதை மீறி ஜெயிக்க வேண்டியதுதான் புதிதாக வருபவர்களின் கனவும் பொறுப்பாகவும் நான் பார்க்கிறேன். அப்படி ஜெயித்தால் தானே அது பெரிய வெற்றி” என்றார்.