நான்கு சிறுவர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாழை’. இப்படத்தை மாரிசெல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்க டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைற்றது.
அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபாமா, உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டர். மேலும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் காணொளி வாயிலாக பேசினர். இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசுகையில்,“இங்கு இருக்கக்கூடிய சினிமா சூழலை வெளிப்படையாக சொல்லிவிடவும், விவாதிக்கவும் முடியுமா? இது வரைக்கும் இருந்த தமிழ் சினிமாவில் யாரைப் பற்றி எடுத்துள்ளார்கள்? சினிமா இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் அதில் நான் எங்கு இருக்கிறேன் என பேசிவிட முடியுமா? என பல கேள்விகள் இருக்கிறது. நான் துணை இயக்குநராக என்னுடைய வாழ்க்கையை தொடங்கும்போது என் வாழ்க்கை சம்பந்தப்பட்டவைகள்தான் என் படங்களில் இருக்க வேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது. அதனால்தான் சினிமாவில் வந்தேன். ஆனால் இங்கு உணர்ச்சிமிக்க படங்களைப் பற்றி பேச தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. இலக்கியங்களில் கூட பட்டியலின மக்களைப் பற்றி பேச இடம் இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவில் அதைப் பற்றிபேச இடம் இல்லாமல் இருந்தது. என்னுடைய முதல் படம் எடுத்து முடிக்கும்வரை அதைப்பற்றி பேச நான் யாரையும் பார்க்கவில்லை.
நான் முதலில் அம்பேக்கர் ஜெயந்தியை கொண்டாடுவதை பற்றி ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். அதை கொடுக்கும்போது அந்த பக்கத்தை மட்டும் கிழித்து கொடுங்கள். ஏனென்றால் இங்கு உள்ள தயாரிப்பாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று சொன்னார்கள். அதனால் நான் பிரபலமான தயாரிப்பாளர்களிடமும், ஹீரோக்களிடமும் நான் செல்லவில்லை. நான் போய் சென்று முதலில் பார்த்த நடிகர் தனுஷ்தான். ஆனால் அவரிடம் சென்று நான் இங்கு இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அப்போது என்னிடம் பயிற்சி இல்லை படம் சம்பந்தமான மாடல் இல்லை. அதன் பிறகு நான் புதிய தயாரிப்பாளர்களை நோக்கி நகர ஆரம்பித்தேன். நிறைய தயாரிப்பாளர்களை சந்தித்தேன் சிலர் புரிந்துகொண்டர். ஆனால் அவர்களிடம் எனக்குள் இருப்பதை சொல்ல தயங்கினேன். ஆனால் படத்தில் நான் அதை சொல்ல தயங்க கூடாது என்றுதான் என் சினிமா வாழ்க்கை எனக்கு தொடங்கியது.