விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சூது கவ்வும்’. நலன் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சூது கவ்வும் 2’ படத்தை எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார். இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்க அவருடன் இணைந்து கருணாகரன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சி.வி.குமார் தயாரிப்பில் இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் இணைந்து இயக்குநர்கள் பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது பா.ரஞ்சித் பேசுகையில், “இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நன்றாக இருந்தது, கண்டிப்பாக மக்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். இப்படத்தில் ஜாலியாக சிவா நடித்துள்ளார். சென்னை 600028 படத்திலிருந்து அவருடன் எனக்கு அன்பான நட்பு ஏற்பட்டது. அது இன்று வரையிலும் தொடர்கிறது. அவருடைய நடிப்பு திறமை இன்னும் பயங்கரமாக வெளிப்படவில்லை. அது வெளிப்படும் என்ற தருணத்திற்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் அது வெளிப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சந்தோஷ் நாராயணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏனென்றால் அவரின் தரமான இசை முன்பு என்னைப்போன்றவர்கள் படம் எடுக்க உறுதுணையாக இருந்தது. முக்கியமான தொடக்கமாகவும் அதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அதைத் தொடங்கி வைத்த தயாரிப்பாளர் சி.வி.குமார், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலருக்கும் என்னுடைய நன்றி. சூது கவ்வும் 2 படம் வெற்றியடைந்து பணியாற்றிய எல்லோருக்கும் சந்தோசமான தருணத்தைக் கொடுக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என்றார்.
Published on 03/12/2024 | Edited on 03/12/2024