'ஓடிடி ப்ளே விருதுகள் 2022', அண்மையில் மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் ஓடிடி-யில் வெளியான திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகைகள் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பத்து வருடங்களில் சிறந்த இயக்குநர் (Filmmaker of the Decade) என்ற பிரிவில் பா.ரஞ்சித்திற்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது பா.ரஞ்சித், "இந்தியாவில் திரைப்படம் ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப்படவில்லை. அதையும் தாண்டி அது நிறைய விஷயங்களை நிகழ்த்துகிறது. நான் பாபாசாகிப் அம்பேத்கரை பின்பற்றுபவன். அந்த அரசியலை கலை மூலம் செய்து கொண்டிருக்கிறேன்" என்று பேசினார். அப்போது 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் திடீரென மேடைக்கு வந்து, "ஜெய் பீம் தலைப்பை தந்தவர் இவர் தான். அதற்காக பா.ரஞ்சித்திற்கு நன்றி" எனத் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த விருது விழாவில் சிறந்த திரைப்படம் (Best Film Popular) என்ற பிரிவில் 'ஜெய் பீம்' மற்றும் 'ஷெர்ஷா' (இந்தி) ஆகிய படங்களுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.