நான்கு சிறுவர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாழை’. இப்படத்தை மாரிசெல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்க டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைற்றது.
அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபாமா, உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டர். மேலும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் காணொளி வாயிலாக பேசினர். இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசுகையில், "ராம் போன்ற இயக்குநருடன் பணியாற்றிருந்தால் நான் சொல்ல வருவதை எளிதில் சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். அதை மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுக்கு உண்டாக்கி கொடுத்ததில் மிகவும் சந்தோஷம். மாரி செல்வராஜ் என்னிடம் வரும்போது மெட்ராஸ் படத்தில் வரும் மாரி கதாபாத்திரத்தை ஏன் அப்படி பண்ணீங்க என்ற வித்தியாசமான கருத்துடன் என்னை அணுகினார். அப்படித்தான் அவரை நான் முதலில் பார்த்தேன். அதன் பிறகு மாரி செல்வராஜ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிதான் அவருடனான பயணம் தொடங்கியது. ஏன் தலித்துகளைப் பற்றி பேச தேவை இருக்கிறது? கடந்த பத்து ஆண்டுகளாக இதைப் பேசி சண்டையிட்டு வருகிறோம். ஆனால் அதற்கான நியாயம் கிடைத்ததா? என்றால் இல்லை. வாய்ப்பு கிடைத்த போதேல்லாம் இங்குள்ள தமிழ் ரசிகர்களும், சில ஆட்களும் ட்ரோல் செய்ய வாய்ப்பை உருவாக்கி கொடுத்து வருகின்றனர்.
எப்படி என்னுடைய திரைப்படங்கள் கொண்டாடப்படுகிறதோ, அதே அளவு மோசமான வார்த்தைகளை கொண்டு ட்ரோல் செய்யப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.சின்ன வயதிலிருந்து இதுபோன்ற ஆயிரத்தெட்டு விஷயங்களை கடந்து வந்துள்ளேன் இதெல்லாம் சாதாரணமானது. ஆனால் மாரி செல்வராஜ் அளவிற்கு எனக்கு தைரியம் கிடையாது. அவருடைய வலியை அவரால் சொல்ல முடிகிறது. ஆனால் என்னால் சொல்ல முடியாது, சொல்ல தைரியமும் இல்லை. என்னுடைய வலியை சொல்ல முடியாமல் நான் தப்பித்து ஓடுவேன். அட்டகத்தி படத்தில் வரும் அப்பா, அம்மாவிற்கு உணவை ஊட்டிவிடும் காட்சிகளை எடுத்துவிட்டு நான் அழுதுள்ளேன். ஏனென்றால் அது என்னுடைய வாழ்க்கை. இந்த எமோஷனல் காட்சியை கூட என்னால் சொல்ல முடியாது. ஆனால் மாரி செல்வராஜ், அவரின் முதல் படத்திலேயே தன்னுடைய வலியை சொல்லிவிட்டார் அந்த வேட்கையின் தொடர்ச்சியாகதான் அவருடைய படங்கள் இருக்கிறது. அவரிடமுள்ள பெரிய பலமே கதை சொல்லுவதுதான். என்னால் பேசி கூட புரிய வைக்க முடியாததை நிதானமாக அவர் புரியவைத்துவிடுவார். அவர் சொல்ல வருவதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன், என அனைத்து படங்களிலும் அவர் சொல்ல வருவதை சரியாக கொண்டு சேர்த்துள்ளார். அந்த வகையில் தற்போது அவரின் வாழ்க்கையை சொல்ல வாழை படத்தை எடுத்துள்ளார்.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்திலும் கொடுமையான வலிகளை காட்டுவார் என்று பயமாகவுள்ளது. மாரி செல்வராஜ் மீது இன்னொரு விமர்சனம் வரும். அவர் வலிகளை சொன்னப்போது கை தட்டி கொண்டாடிய கூட்டம் கர்ணனாக வன்முறையை காண்பிக்கும்போது விமர்சிப்பார்கள். ஒரு படைப்பாளிகு மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்துகிறார்கள். அது என்னவென்றால் பரியேறும் பெருமாள்தான் நல்ல படம் என சொல்கிறார்கள். அப்போ கர்ணன், மாமன்னன் எல்லாம் மொக்க படமா? கர்ணன் ஏன் உனக்கு புடிக்கவில்லை? ஏனென்றால் அவன் திருப்பி அடிக்கின்றான். ஏன் திருப்பி அடித்தால் உனக்கு புடிக்காதா? ஏன் அவன் குரலை உயர்த்துகிறான்? என்ன பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது? ஏன் இந்த சூழலை சமூகம் அவனுக்கு உருவாக்கி கொடுத்துள்ளது? இந்த கேள்விகளை எல்லாம் உன்னிடம் நீ எப்போது கேட்கப்போகிறாய். இந்த கேள்விக்கான பதிலை தேடாமல், நீ என்னை கொடுமைப்படுத்தியுள்ளதை சொல்லி உனக்கு ஏற்றதுபோல் நான் படமெடுக்கவேண்டுமா? அதைத் உடைத்துதான் கர்ணனையும், மாமன்னனையும் மாரி எடுத்தார். அதேபோல்தான் வாழையும் இருக்கும்.
மாரி செல்வராஜின் எல்லா படமும் என்னுடைய எல்லா படமும் சுயசரிதைதான். தத்துவத்தின் அடிப்படையில் வலது, இடது என்று கருதாமல் எல்லா இயக்குநரிடமும் இப்படத்தை போட்டு காட்டியது மகிழ்சியான விஷயம். இந்த படம் மக்களுக்கு கொண்டாட்டத்தையும், வலியையும் கண்டிப்பாக கொடுக்கும், படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.