ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த ஆதிசிவம் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவில் திரைப்பட தணிக்கை வாரியம் 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மீறும் வகையில் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம்பெறும் பட்சத்தில் அவைகளை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை செய்து வெளியிடும். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் திரைப்படங்கள்,வெப் தொடர்கள் ஆகியவை தணிக்கை செய்து வெளியிடப்படுவதில்லை.
ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, போதைப் பொருட்கள் பயன்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் ஓடிடி தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து ஒழுங்கு படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் விக்டோரியா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய தொலை தொடர்பு செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.