உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக ஆரம்பித்தது, அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது அங்கு பெரிய பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் அகாடமி, 2022-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர 397 புகழ் பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கஜோல் மற்றும் இந்தி இயக்குநர் ரீமா காக்டி உள்ளிட்ட சிலர் இந்த ஆண்டு இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு ஆஸ்கர் உறுப்பினரின் அழைப்பாளர் பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேர் உள்ளனர். இதில் நடிகர்களின் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெறவுள்ளார். இந்த செய்தியை சூர்யா மற்றும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சூர்யாவின் 'சூரரை போற்று' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.