இந்த வருடம் வெளியான படங்களில் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை மக்களிடம் பெற்ற படம் 'ஓ மை கடவுளே'. புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. ட்ரைலர் வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படக்குழுவினரை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டினார்கள்.
இதனிடையே, இந்தப் படம் வெளியாகும் முன்பே இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியது. இதையும் அஷ்வத் மாரிமுத்து இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இதன் பணிகளைத் தொடங்கவுள்ளார்.
தற்போது 'ஓ மை கடவுளே' படத்தின் இந்தி ரீமேக்கும் முடிவாகியுள்ளது. இது தொடர்பாக நேரலை ஒன்றில் பேசும்போது இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, "நான் தற்போது 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறேன். மேலும், இந்தி ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. இவ்விரண்டும் தவிர்த்து தமிழில் அடுத்த படத்துக்கான கதையையும் எழுதி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.