நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், திருச்சிற்றம்பலம் என உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டு நித்யா மேனனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதையடுத்து தற்போது மலையாளத்தில் உருவாகும் 'ஆறம் திருக்கல்பனா' படத்தில் நடித்து வருகிறார்.
படங்களில் பிசியாக நடித்து வரும் நித்யா மேனன் நேரம் கிடைக்கும் போது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அங்கு நடந்த சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். ஆங்கிலத்தில் உள்ள பாடத்தை அவர்களுக்கு புரியும் வகையில் தெலுங்கில் மொழிபெயர்த்து சொல்லிக்கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் நித்யா மேனன் பகிர்ந்த நிலையில் அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிப்பது மட்டுமில்லாமல் இது போன்று சமூக அக்கறையுள்ள விஷயங்களில் நித்யா மேனன் ஆர்வம் காட்டுவதால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.