ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில், 375 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நெல்சன் திலீப் குமார், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய நெல்சன், படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "ஜெயிலர் படம் தொடங்கும் போதே நல்ல படமாக வரவேண்டும் என்று தான் நினைத்தோம், ஆனால் இன்றைக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. ஜெயிலர் படத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் நடிகர்களை பற்றியே பேசி வந்துள்ளேன். இன்றைக்கு தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றி பேசியாக வேண்டும். ஏனென்றால் அவர்களின் உழைப்பு இந்த படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உழைத்துள்ளனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக், எந்த ஒரு கடினமான ஷாட்டாக இருந்தாலும், கொஞ்சம் நேரம் கடந்தாலும் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். படம் வெளியாகும் தேதி வரை கடுமையாக தனது உழைப்பை தந்த எடிட்டர் நிர்மல், படம் வெளியான பின்பும் ப்ரோமோஷன் விடியோக்களை எடிட் செய்ய இறங்கிவிட்டார்" எனக் கூறி அவரது அர்ப்பணிப்பை நெல்சன் பதிவிட்டார்.
பின்னர், படத்தின் ஆக்ஷன் காட்சிகளை இயக்கிய ஸ்டன் சிவாவை, "சாரிடம் வேலைபார்ப்பது அவ்வளவு எளிதாக இருந்தது. அவரோட சிந்தனைகளைத் திணிக்காமல். நாம் நினைக்கும் காட்சிகளை உருவாக்கித் தருவார்" என சொல்லி மகிழ்ந்தார். கலை இயக்குநர் கிரண் நடிக்க வாய்ப்பு கேட்டதாக சொன்ன நெல்சன். அவரை நான் நடிக்க வைக்க நினைக்கவில்லை ஏனென்றால் எனக்கு அவர்களின் கலை மீது மதிப்பு இருக்கு என கூறினார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக வருவதற்கு சன் பிக்சர்ஸ் மிகப் பெரும் பங்காற்றியுள்ளது, "நாம் நினைத்த பட்ஜெட்டை விட அதிகமாக சென்றுவிட்ட நிலையிலும். படம் நல்லா வருவதற்கு கலாநிதி மாறன் உறுதுணையாக இருந்தார்" என்றார்.
தொடர்ந்து, நடிகை மிர்னா, சுனில்,ஜாஃபர், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோரை பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹுக்கும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, பாடல் வரிகளை படித்தப் பின் இவர் நிச்சயம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவரா இருப்பார் போல என நினைக்கும் அளவுக்கு தீயா இருந்தது வரிகள். இவர்கள் எல்லோருக்கும் மேலாக நான் நன்றி கூறுவது ரஜினி சாருக்குத் தான். காரணம், என் மீது ஆரம்பம் முதலே முழு நம்பிக்கை வைத்தவர். படம் தயாரான பிறகு அவருக்கு திரையிட்டேன், படம் நல்லா வரும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு சூப்பரா வரும்னு நினைக்கல" என்று என்னை ஆச்சர்யப்படுத்தினார். இவ்வளவு பெரிய ஹிட்டை கொடுத்துவிட்டு இன்றைக்கு எங்கேயோ இமயமலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். நிச்சயம் அவர் சென்னை வந்த பிறகு நேரில் சென்று நன்றி கூறுவேன் என உருக்கமாக பேசினார்.