நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.
இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.