இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக 'அசுரன்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். 'விஸ்வாசம்' படத்துக்குக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை டி.இமான் தட்டிச் சென்றார். சிறந்த துணை நடிகர் விருதை விஜய்சேதுபதி தட்டிச் சென்றார். ஒத்த செருப்புக்காக பார்த்திபன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பல துறைகளில் தேசிய விருதை தட்டிச் சென்றனர். இவர்களுக்குத் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் நாசர் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....
"என்னதான் மாபெரும் பொருளாதார வெற்றி ஈட்டினாலும் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரமும் விருதுகளும் தான் மனநிறைவும், அகமகிழ்வும்...
வருட காலமாய் துவண்டு கிடந்த தமிழ்த் திரைத்துறைக்கு சமீபத்திய விருது செய்தி, புத்துணர்ச்சி, புது வேகம் மற்றும் உத்வேகத்தைக் கொடுக்கிறது. ‘அசுரன்’ படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருது பெற்ற தனுஷ், சிறந்த படம் ‘அசுரன்’ படத்திற்காக தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் வெற்றிமாறன், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருது பெற்ற விஜய்சேதுபதி, ‘விஸ்வாசம்’ படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற டி.இமான், பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு நம்பர்7’ படத்திற்காக இரண்டு தேசிய விருது பெற்ற ஆர்.பார்த்திபன், ஒலி வடிவமைப்பு செய்த ரசூல்பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் இப்படி தமிழ்த்திரையின் வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னேடுகள் பொறித்த நடிகர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் நடிகர் சமூகம் சார்பாக பெருமைமிகு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.