நடிகர் நந்தா முதன்முதலாக தயாரிப்பாளராகக் களமிறங்கி லத்தி திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளராக அவருடைய பணி மற்றும் இதுவரை கடந்து வந்த பாதை, மேலும் அவருடைய பயணம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். அவற்றை பின்வருமாறு காண்போம்.
குழந்தைகளை மையமிட்டு திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதாவது அனிமேசன் திரைப்படங்கள் மீதான ஆர்வம் இருந்தது. குழந்தைகளுக்கு சிறந்த சிந்தனைகளை அதன் வழியே கொடுக்க முடியும் என்று நம்பினேன்.
லத்தி படத்தின் கதையை ஒரு நடிகனாகத்தான் முதலில் கேட்டேன். பிறகு இது நடிகர் விஷாலுக்கு பொருத்தமான கதையாக இருக்குமென நினைத்தோம். அவரிடம் சொன்னோம். சிறுவனுக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்பதால் அவர் யோசிக்க ஒரு நாள் எடுத்துக்கொண்டார். பிறகு சரி என்று ஒப்புக்கொண்டார். நீங்களே தயாரிச்சுடுங்களேன்னு எங்களையே தயாரிப்பாளராக்கிவிட்டார்.
விஷால் இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். பெரிய பட்ஜெட் படம் எங்களால் பண்ண முடியுமா என்று எந்த சந்தேகமும் இல்லாமல் வேறு எந்த பேனருக்கும் போகாமல் எங்களை தயாரிக்கச் சொன்னதுக்கு எங்கள் மீதான நம்பிக்கையே காரணமாகும்.