பிரபல நடிகை நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியில் அரசியல் பணியாற்றி வரும் நிலையில் தனக்கு ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்துள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "தான் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு லிங்க்குடன் மெசேஜ் வந்தது. உடனே அந்த லிங்கை க்ளிக் செய்தேன். பின்பு ஒரு போன் கால் வந்தது, அதில் தான் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கே.ஒய்.சி விவரங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என சொல்லித்தருவதாக ஒரு நபர் பேசினார். அவரிடம் நான் எந்த விவரத்தையும் சொல்லவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து ரூ.99,998 பணம் திருடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கூறிய நக்மா, "அந்த நபருடன் பேசிக் கொண்டிருக்கையில் எனது போனை கட்டுப்பாட்டில் எடுத்து, இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டார். அப்போது தொடர்ந்து எனக்கு ஓடிபி வந்து கொண்டிருந்தது. அதனால் இன்னும் அதிகமாக பணம் எடுக்க முயற்சித்த அவர்கள் அதிக தொகையை எடுக்க முடியவில்லை" என்றார்.
சமீப காலமாக ஆன்லைன் பணமோசடி அதிகமாக அரங்கேறி வருகிறது. இதில் திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கூட இந்த ஏமாற்று வலையில் சிக்கியிருக்கின்றனர். சமீபத்தில் இதே பாணியில் ஒரே வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை திருடியுள்ளனர். அதில் பிரபல நடிகை ஸ்வேதா மேனனும் ஒருவர். அதைத் தொடர்ந்து இப்போது நக்மாவுக்கும் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.