துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கலாம் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், “ நிறைய நல்ல கதாபாத்திரங்கள் இருக்கிறது. அதைமீறி வன்முறைகள் அதிகமாக உள்ள படம். பதினாறு வயது பெண்ணை அழைத்துக்கொண்டு வந்து இது என் மகள்தான் சார் பதினெட்டு வயதாகிறது என்று ஏமாற்று வேலையெல்லாம் இருக்க கூடாது. அதேபோல கர்ப்பிணி பெண்கள் பார்க்கக்கூடாது. பொறுமையாக இருந்து தொலைக்காட்சியில் பாருங்கள். அதற்கு ஏற்றார்போல படத்தொகுப்பு செய்யப்பட்டிருக்கும். கதை மட்டும் என்னவென்று பார்த்துக்கொள்ளுங்கள். தியேட்டருக்குள் வந்து பார்த்தீர்கள் என்றால் முடிந்துபோய்விட்டது கதை. நான் சீரியஸாக சொல்கிறேன் விளையாட்டுக்கு சொல்லவில்லை” என்றார்.