2008-ஆம் ஆண்டு சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் . மதுரையில் 80-களில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசை பணிகளை மேற்கொண்டிருந்தார்.
சிறிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பலரும் 'ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு' என அனைத்து துறைகளிலும் படம் சிறப்பாக இருந்தது எனப் பாராட்டினர். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், 'கேங்ஸ் ஆஃப் வசேய்பூர்' படத்தை எடுக்க எனக்கு இன்ஸ்பிரஷனாக இருந்ததே 'சுப்ரமணியபுரம்' படம் தான்' எனப் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத கேங்ஸ்டர் படங்களின் லிஸ்டில் இருக்கும் 'சுப்ரமணியபுரம்' படம் வெளியாகி இன்றுடன் (04.07.2022) 14 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜூலை 4 எனக்கு எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷல். காரணம் 'சுப்ரமணியபுரம்' 14 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் வெளியானது. நேற்று வெளியானது போல் இருக்கிறது. இன்று வரை படத்தை மக்கள் மதிக்கும் விதத்தை நான் தாழ்மையோடு ஏற்றுக் கொள்கிறேன். விரைவில் நீங்கள் ஒரு செய்தியை கேட்பீர்கள், எனது அடுத்த அவதாரம், கண்டிப்பாக இயக்குநர் தான்" எனக் குறிப்பிட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சசிகுமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
July 4 will always spl to me #Subramaniyapuram was released on this day 14 years ago. It just feels like yesterday. I’m humbled by the way people revere it, until today. Very soon you will hear the news about my Nxt venture, of course, as a filmmaker #14YearsOfSubramaniyapuram pic.twitter.com/irCmUIysgE— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2022