Skip to main content

"சச்சின் வந்தது எனக்கு பெருமை" - நெகிழ்ந்த முத்தையா முரளிதரன்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Muttiah Muralitharan about sachin released his biopic movie 800

 

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை '800' என்ற தலைப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. 

 

பின்பு இது பெரும் சர்ச்சையாக மாற, விஜய் சேதுபதி விலகிவிட்டார். இதனிடையே முத்தையா முரளிதரன் பேசியதாக ஒரு சர்ச்சை உருவானது. இதற்கு விளக்கமளித்த முத்தையா முரளிதரன், "நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்" எனக் குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

 

இதையடுத்து முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் நடிக்கிறார். மேலும் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

ட்ரைலரை பார்க்கையில், கிரிக்கெட் அல்லாது அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளது போல் தெரிகிறது. ட்ரைலர் ஆரம்பத்தில், "குடியுரிமை இல்லாத கொத்தடிமை கூட்டத்தில் இருந்து வந்தவங்களுக்கு குடிமகன் என்ற அங்கீகாரம் கிடைக்கிறதே கஷ்டம். இன்றைக்கு நாடே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு ஒரு தோட்டக்காட்டான் வளர்ந்திருக்கான்" என நாசர் குரலில் தொடங்கி அவர் கிரிக்கெட்டில் வளர்ந்து வந்த சமயத்தில் அவரது பந்துவீச்சில் சில குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டி கிரிக்கெட்டில் ஆட முடியாமல் போனது குறித்து பின்பு மீண்டும் எப்படி விளையாடி பல்வேறு சாதனை படைத்தார் என்பதை விரிவாக காண்பித்துள்ளது போல் அமைந்துள்ளது. 

 

ட்ரைலரின் நடுவே, செய்தியாளர்கள் முத்தையா முரளிதரனிடம், "தமிழ் பேச தெரியுமா அல்லது பேச விருப்பமில்லையா" என வரும் வசனம், முத்தையா முரளிதரனிடம் அவர் அப்பா, "ஒரு தமிழன் அவ்ளோ லேசா டீமில் சேர இயலாது என சொல்லிக்கிறாங்கப்பா" எனக் கேட்கும் பொழுது, "என்னை நான் ஒரு தமிழனா மட்டும் பார்க்கலயே அப்பா" எனக் கூறுகிறார். உடனே அவர் அப்பா, "பின்ன நீ என்ன சிங்களவனா..." எனக் கேட்க "கிரிக்கெட்டர்" என முத்தையா முரளிதரன் பதிலளிக்கும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ட்ரைலர் யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

இந்த ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெய சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட்டனர். நிகழ்ச்சியில் முத்தையா முரளிதரன் குறித்துப் பேசிய சச்சின், "அவர் ரியல் ஸ்போர்ட்ஸ் மேன். ஆபத்தான பந்து வீச்சாளர். அவரை எப்படி சமாளிப்பது எந்த யுக்தியை கையாள்வது, எதை பயன்படுத்தினாலும் அவர் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அதற்கான காரணம் அவருடைய உண்மையான பலத்தை இழக்காதது தான்" என்றார். 

 

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளரிடம் பேசிய முத்தையா முரளிதரன், "சச்சின் மற்றும் ஜெயசூர்யா நிகழ்ச்சிக்கு வந்து ட்ரைலரை வெளியிட்டதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படம் கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிஜமாகியுள்ளதாக உணர்கிறேன். மக்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். என் ரசிகர்கள் படம் வந்து பார்த்து என்ஜாய் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்