கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்று அவரது குடும்பத்தினர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ராஜமௌலி, அனைவரும் வீட்டுத் தனிமையில் இருப்பதாக பகிர்ந்திருந்தார். பின்னர், வீட்டுத் தனிமைக் காலம் முடிந்து கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானவுடன், பிளாஸ்மா தானம் செய்ய இன்னும் சில வாரங்கள் காத்திருக்கப் போகிறோம் என்று பகிர்ந்திருந்தார். தற்போது பிளாஸ்மா தானம் குறித்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் ஆன்டிபாடீஸ் உருவாகிவிட்டதா என்று பரிசோதனை மேற்கொண்டேன். எனது ஐஜிஜி அளவுகள் 8.62 என்கிற நிலையில் உள்ளன. 15-க்கும் அதிகமாக இருந்தால்தான் என்னால் பிளாஸ்மா தானம் கொடுக்க முடியும். பெரியண்ணனும், பைராவாவும் இன்று தானம் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆன்டிபாடீஸ் நம் உடலில் உருவாகி குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும். கோவிட்-19 தொற்று குணமாகிய அனைவரும் முன் வந்து பிளாஸ்மா தானம் செய்து உயிரைக் காப்பாற்றுபவராக மாறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ராஜமௌலி பதிவிட்டுள்ளார்.
ராஜமௌலியின் உறவினரான இசையமைப்பாளர் கீரவாணியும், "நானும், எனது மகன் பைரவாவும், நாங்களாகவே சென்று பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளோம். நல்லபடியாக உணர்கிறோம். வழக்கமான ரத்த தானத்தை போலத்தான் இது சாதாரணமாக நடந்தது. இதை செய்ய யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவமனையில் பிளாஸ்மா தான பிரிவிலிருந்த மருத்துவக் குழுவுக்கு நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.