
மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் தற்போது 'லூசிஃபர்' பட இரண்டாம் பாகமான `எல்2; எம்புரான்' பட ரிலீஸூக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிரித்விராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதில் மம்மூட்டியும் இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில் மோகன்லால் நேற்று சபரி மலையில் தரிசனம் மேற்கொண்டார். கணபதி கோவிலில் இருந்து இருமுடி கட்டி கொண்டு சபரி மலைக்கு சுமந்து சென்றார். இவர் கடைசியாக இந்த கோயிலுக்கு புலி முருகன் பட வெளியீட்டின் போது சென்றிருந்த நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது சென்றுள்ளார். இதனால் அவரைக் கண்டதும் கோயில் இருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். பின்பு மோகன்லால் மம்மூட்டியின் முழுப் பெயரான ‘முகமது குட்டி’ என்ற பெயரில் உஷ பூஜை செய்துள்ளார். இது தொடர்பான ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மம்மூட்டிக்கு புற்றுநோய் எனத் தகவல் வெளியான நிலையில் அதை அவரது தரப்பு மறுத்து விளக்கமளித்தது. அதாவது மம்மூட்டி ரம்ஜானுக்கு உண்ணாவிரதம் இருப்பதால் விடுமுறையில் இருப்பதாகவும் இடைவேளைக்குப் பிறகு அவர் மோகன்லாலுடன் மகேஷ் நாராயணன் இயக்கும் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.