95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதில் விருது பெற்றவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய கதை இது. இதை குனீத் மோங்கா என்பவர் தயாரிக்க கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் வாங்கிய பிறகு படத்தை பலரும் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொம்மன், பெள்ளி தம்பதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளனர். முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து பாராட்டுப் பத்திரமும் இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
மேலும், முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும் 91 பேருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும். யானை பராமரிப்பாளர்களுக்கு உகந்த வீடுகள் கட்ட ரூ. 9.10 கோடி நிதியுதவியை அரசு வழங்கும். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும். கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் ரூ. 8 கோடியில் யானைகள் முகாம் அமைக்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.