மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ளதாலும் மாரி செல்வராஜ் படம் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் உதயநிதியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கில் மாரி செல்வராஜ் வருகை தந்திருக்கும் நிலையில் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், "இப்படம் என்னுடைய எமோஷன். நிச்சயமா ஒரு நல்ல படமாகவும் முக்கியமான படமாகவும் இருக்கும். மக்கள் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு கொடுத்திருக்காங்க. அதன் நோக்கத்தையும் தேவையையும் கண்டிப்பா இப்படம் பூர்த்தி செய்யும். சர்ச்சைகளுக்கு படம் பதில் சொல்லும். படம் மக்களை வெல்லும் என நம்புகிறேன். மக்கள் கருத்து தான் நிஜமானது. உதயநிதி அவருடைய கடைசி படம் என்று தான் என்னை அழைத்திருந்தார். அவர் எதற்காக என்னை அழைத்தாரோ அப்படி ஒரு நல்ல படமா மாமன்னன் இருக்கும்" என்றார்.