திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மன்னை சாதிக். இவர் டிக்டாக், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி செய்து தன்னைத் தானே செலிபிரிட்டி என்று பப்ளிசிட்டி செய்து பிரபலமானவர். இந்த சமூக வலைதள பிரபலத்தை வைத்து களவானி-2, மேகி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமூக வலைதளங்களில் எதையாவது விமர்சித்து வீடியோ பதிவிட்டு பிரபலத்தை தேடுபவர்களில் மன்னை சாதிக்கும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனை அவதூறாக சித்தரித்து, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் படம் ஒன்றை சாதிக் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் வைரலானதால், மன்னார்குடி நகர பாஜக தலைவர் ரகுராமன், மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், ஆளுநரின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரித்த போலீஸார், மன்னை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, மன்னார்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி,சிறையில் அடைக்கப்பட்டார் மன்னை சாதிக்.