
1970களில் மலையாளத்தில் நாயகனாக பல்வேறு படங்களில் நடித்திருந்தவர் ரவிக்குமார். தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு ‘அவர்கள் ரவிகுமார்’ என அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து சத்யராஜின் ‘மலபார் போலீஸ்’, கார்த்திக்கின் ‘ரோஜா வனம்’, விஜய்யின் ‘யூத்’, விஜயகாந்தின் ‘ரமணா’, ரஜினியின் ‘சிவாஜி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். கடைசியாக ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படத்தில் நடித்திருந்தார். சினிமாவைத் தாண்டி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
நடிப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த வந்த ரவிக்குமார் தற்போது காலமாகியுள்ளார். உடல் நலப் பிரச்சனையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.