பெண் சாதனையாளர்களை கவுரவிக்க நான்காம் ஆண்டுக்கான சுயசக்தி விருதுகள் அறிவிப்பு நேற்று வெளியானது. பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் நேச்சுரல்ஸ், பிராண்ட் அவதார், எஸ்.எஸ்.வி.எம் இன்ஸ்டிடியூஷன்ஸ் மற்றும் சக்தி மசாலா ஆகியோர் இணைந்து 'Homepreneur Awards' ’சுயசக்தி விருதுகள்’ வழங்குகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டு செய்யும் பெண் தொழில்முனைவோர்களை கௌரவப்படுத்தும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் இந்த விருதுகள்’ வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழாவில் விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், அழகு மற்றும் ஆரோக்கியம், கல்வி, உணவு மற்றும் பானங்கள், வீட்டுத் தேவை பொருட்களுக்கான சில்லறை வர்த்தகம், ஹெல்த்கேர், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, சமூக நலன் என பல்வேறு பிரிவிகளின்கீழ் பெண் தொழில்முனைவோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பல்வேறு துறை சார்ந்த பிரபல பெண்கள் அடங்கிய ஜூரி குழு விருது பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது. இந்நிலையில் நேற்று வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டுக்கான 'சுயசக்தி விருதுகள்’ அறிவிப்பும், விண்ணப்ப தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விருதுக்கு தேர்வாகப் போகும் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். சுயசக்தி விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ‘Homepreneurs Awards 2021’ அறிமுகப்படுத்தினார். அப்போது விருதுகள் பற்றி பேசிய மணிரத்னம்,
"பெண் சக்தி என்பது மிகவும் வலிமையானது. எனக்கு தெரிந்து பெண்கள் என்பவர்கள் பயனுள்ளவர்கள், விரும்ப்படக்கூடியவர்கள், பின்பற்றப்பட்ட வேண்டியவர்கள், போற்றப்பட்ட வேண்டியவர்கள் ஆவர். என் வாழ்வில் சாதித்த பெண்களை பார்த்து நான் ஆச்சரியப்பட்டது கிடையாது. சொல்லப்போனால் அவர்கள் பிறப்பிலேயே நம்மைவிட இன்னமும் திறமைசாலிகள். அப்படியாகப்பட்ட சாதனை பெண்களுக்கு இந்த மாதிரி நேரத்தில், இந்த மாதிரி விருதுகள் அறிவிக்கப்படுவதை அறியும்போது சந்தோஷமாக இருக்கிறது. நான் செய்யமுடியாத்தை எல்லாம் என் மனைவி செய்வதை பார்க்கும்போது அவரை போற்ற தோன்றுகிறது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதை செய்யக்கூடிய திறன் என் மனைவியிடம் உண்டு" என கூறினார்.