மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இயக்கிய மலையாள படங்கள் விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டது, வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியது. இவர் சமீபத்தில் மம்மூட்டியுடன் இணைந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்கினார். அப்படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டு படப்பிடிப்பும் முடிந்து புரொமோசன் பணிகளும் நடந்து முடிந்தது.
தமிழின் பிரபலமான ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர், மம்மூட்டி கடைசியாக தமிழில் நடித்த ‘பேரன்பு’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பிரபலமான குணச்சித்திர கதாபாத்திரங்களும் மற்றும் நடிகை ரம்யா பாண்டியனும் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்தப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இன்று நேரடியாக வெளியாவதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதே போல் மலையாளத்தில் வெளியாகி விமர்சனங்கள் வரத் தொடங்கி விட்டது. ஆனால், தமிழில் எங்குமே திரையிடவில்லை. இதனால் இப்படத்திற்கு தமிழகத்தில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே எழும்பியுள்ளது. எனினும் அது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. மேலும் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மம்மூட்டியின் படத்தைக் காண ஆர்வமாக இருந்த ரசிகர்களிடையே இன்று வெளியாகாததால் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.