ஆன்லைன் சூதாட்டமான ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இருப்பினும் தமன்னா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். இதனால் திரை பிரபலங்கள் சமூகம் சார்ந்த நல்ல விஷயங்களில் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று பலரும் ரம்மி விளம்பரத்தில் நடிப்பவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் லால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கரோனா ஊரடங்கின் போது நான் பணக்கஷ்டத்தால் மிகவும் சிரமப்பட்டேன். அந்த நேரத்தில் தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. முதலில் யோசித்தேன், அதன்பிறகு எனக்கு இருந்த பொருளாதார கஷ்டத்தால் அந்த விளம்பரத்தில் நடித்தேன், தற்போது வருந்துகிறேன். இனிமேல் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். இவர் சண்டக்கோழி, காளை, மருதமலை, கர்ணன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.