இந்த ஆண்டு இந்திய சினிமா பல ஜாம்பவான்களை இழந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இர்ஃபான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட நடிகர்களின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தி செல்ல, வளர்ந்து வரும் நடிகர்களான சிரஞ்சீவ் சர்ஜா, சுசாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்டோரின் மறைவு ஆறாத வடுவாக சினிமா ரசிகர்களின் மனதில் உள்ளது. அந்த வரிசையில் மலையாள சினிமாவிலும் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அனில் முரளி உயிரிழந்துள்ளார்.
அனில் முரளி, தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால் பலரையும் நடுநடுங்க வைத்த இவர், மலையாள சினிமாவில் பலருக்கும் போலீசாகவே அறியப்பட்டார். அவ்வளவு கதாபாத்திரங்கள் போலீசாகவே நடித்திருக்கிறார் என்று சொல்வார்கள். தமிழில் இவர் புரிந்த கதாபாத்திரங்கள் பலவும் வில்லத்தனமானதே என்பதால் ஒரு வில்லன் நடிகராக அறியப்பட்டார் அனில் முரளி.
கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அனில் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மலையாள உலகின் நட்சத்திரங்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அனில், 6 மெழுகுவத்திகள், நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, எங்க அம்மா ராணி, தொண்டன், நாகேஷ் திரையரங்கம், மிஸ்டர் லோக்கல், ஜீவி, நாடோடிகள் 2, வால்டர் போன்ற ஒருசில தமிழ் படங்களிலேயே நடித்துள்ளார்...