![nagh](http://image.nakkheeran.in/cdn/farfuture/bhEBh6AyYPKSbV1oXImB0PkpJ9hBnZFOOFaCAjopKUE/1589776455/sites/default/files/inline-images/nagh%20aswin%20.jpg)
’எவடே சுப்ரமணியம்’ படத்தைத் தொடர்ந்து, பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'மகாநடி' என்ற படத்தை இயக்கினார் நாக் அஸ்வின். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாக் அஸ்வின் இந்திய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருமாறினார். அடுத்து, பிரபாஸின் 21 வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் பிரம்மாண்ட படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் மட்டும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு நாக் அஸ்வின் தனது யோசனையை ட்விட்டரில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், “ஒருமுறை சுரேஷ்பாபு மற்றும் ராணா இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது, வெளிநாடுகளைப் போல தியேட்டர்களில் பீர், மது விற்பதற்கு உரிமம் கொடுக்கப்பட்டால் அது கூட்டத்தை அதிகப்படுத்துமா என்ற பேச்சு வந்தது. அதன் மூலம் திரையரங்கத் தொழிலைக் காப்பாற்ற இயலுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல யோசனையா? அல்லது தவறான யோசனையா?" என்று தெரிவித்தார்.
இந்த ட்வீட்டிற்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இதன்பின் நாக் அஸ்வின், “முற்றிலும் உண்மை. அது ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு வருவதைத் தடுக்கும். ஒரு சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வேண்டுமானால் அனுமதிக்க முடியும். ஆனால் அது தீர்வு கிடையாது. மக்களை மீண்டும் வரவைப்பதற்கும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் தியேட்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். தியேட்டர்கள் திறந்தவுடனேயே நீங்கள் படம் பார்க்கச் செல்வீர்களா? அல்லது சில வாரங்கள் காத்திருப்பீர்களா?" என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாக் அஸ்வின்.