விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என 2 தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். 2 தரப்பு மனுவும் தனித்தனியே விசாரணைக்கு வந்தபோது அம்மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்பு இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்தாக்ஷன் என்பவர் இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "இந்தியாவை அவமானப்படுத்தும் வகையிலும், அமைதியை விரும்பும் இந்தியாவை, உலகிலேயே தீவிரவாதிகளை உருவாக்கும் நாடாகச் சித்தரிக்கும் வகையிலும் படம் உருவாகியுள்ளது. இந்திய இறையாண்மைக்கும், மக்களின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து, நாட்டில் உள்ள பொது அமைதியை இப்படம் கெடுக்கும். எனவே, இந்தப் படத்தை வெளியிட முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறி பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்? முன்பே வந்திருந்தால் யாரையாவது படத்தைப் பார்த்து முடிவு செய்யச் சொல்லியிருக்கலாம். நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை. பிரச்சனைகள் வரும் என்று எப்படி யூகிக்க முடியும்? மேலும், கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தைக் கைப்பற்றி உள்ளது." என மனுதாரரிடம் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.